கல்விக் கண் திறந்த
கமருன்னிஸா மேடம்..
நம்முடைய பள்ளபட்டி நகரில்
Published : 20th Wed, Nov 2019
*கல்விக் கண் திறந்த*
*கமருன்னிஸா மேடம்*
*1970- களின் மத்திய காலம்*
நம்முடைய பள்ளபட்டி நகரில் ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடம் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. நமதூர் மாணவ- மாணவிகள் எல்லாம் அங்கு தான் படித்து வந்தார்கள்.
6- ஆம் வகுப்பு முதல் 11- ஆம் வகுப்பு வரை இயங்கி வந்த இந்தப் பள்ளியில், நமதூர் பெண் பிள்ளைகள் 7- ஆம் வகுப்பைக் கடந்து 8- ஆம் வகுப்பு வரைக்கும் படிப்பதே ஒரு சாதனைதான்.
அதற்குள்ளாக அவர்கள் பூப்பெய்தி வீட்டோடு முடங்கி விடுவார்கள். அதன் பின்பு என்னதான் படிக்கும் ஆர்வம் இருந்தாலும் பெண் குழந்தைகள் மேற் கொண்டு படிக்கவே முடியாது என்ற நிலையே நிலவி வந்தது.
இந்த இறுக்கமான சூழலில் தான் , 1974- ஆம் ஆண்டில் *உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் பெண்கள் உயர் நிலைப் பள்ளி* என்ற புதிய கல்விக் கூடம் நமதூரின் தெற்கு பங்களாவில் உதயமானது.
அன்றைய ஊர் பெரியவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்தக் கல்வி நிலையமானது *பள்ளபட்டி கல்விச் சங்கம்* என்ற அமைப்பால் திறம்பட நிர்வாகிக்கப்பட்டது.
அந்த கை தேர்ந்த நிர்வாகிகளால் கண்டெடுக்கப்பட்ட வைரக் கல்லாக வத்தவர் தான் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட *திருமதி கமருன்னீஸா அப்துல்லா* அவர்கள்.
மதுரை மாநகரின் பள்ளியில் இருந்து பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரியாக ( D.O) செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த இனிய வேளையில் தான், நமது ஊர் பள்ளி நிர்வாகிகள் *நம்ம கமருன்னீஸா மேடத்தை* சந்தித்தார்கள்.
நமது ஊரின் இஸ்லாமிய சூழல், ஊரில் போதிய பொருளாதார பின் புலம் இருந்தும் பெண் பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவு, கல்வி மீது பெண்களுக்கு இருந்த வேட்கை - என, இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு, தன்னைத் தேடி வந்த அரசின் பதவி உயர்வை தியாகம் செய்து விட்டு, இது வரை செய்து வந்த அதே தலைமை ஆசிரியைப் பணியை நமது ஊரில் வந்து தொடங்கி விட்டார்.
அன்றைக்கு அவர் செய்த ஒரே ஒரு தியாகம் தான் , இன்றைக்கு இந்த ஊரையே வளப்படுத்தி உள்ளது. ஆம்! நண்பர்களே. அன்றைக்கு அவர் நமது ஊருக்கு காலடி எடுத்து வைத்த பிறகு தான் நமதூர் பெண் பிள்ளைகள் தங்களின் உயர்நிலைப் படிப்புகளை படிக்க ஆரம்பித்தார்கள்.
கமருன்னீஸா மேடம் அவர்கள் வீடு வீடாகச் சென்று மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். அழைத்து வந்த பெண் பிள்ளைகளை தன் பிள்ளைகளைப் போல பாவித்து முழு அக்கறையோடு அவர்களுக்கு கல்வி புகட்டினார். இங்கு கல்வி பயில வரும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளுக்கும் ஒரு ஒப்பற்ற தாயாகவே திகழ்ந்தார்கள். இதற்கெல்லாம் ஆரம்பத்தில் ஒத்துழைப்பு தராத பெற்றோர்கள், மேடத்தின் அர்பணிப்பான செயல்களைக் கண்டு, காலப் போக்கில் இசைந்து போக ஆரம்பித்தார்கள்.
அதே வேளையில் , தனக்கு கீழே பணியாற்றும் எல்லா ஆசிரியைகளையும் தன்னைப் போலவே அர்பணிப்புடன் வேலை செய்ய பழக்கினார்.
பள்ளியின் கல்விச் செயல்பாடுகள், ஒழுக்க மாண்புகள், மனிதவள மேம்பாடு - என அனைத்து அம்சங்களும் ஒளி வீசத் தொடங்கியது. இதன் காரணத்தால், பள்ளியின் புகழ் தமிழகம் எங்கும் பரவியது. தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் இருந்து கூட பெண் பிள்ளைகள் இங்கு படிக்க வந்தார்கள்.
இதனால், இந்தப் பள்ளியானது, தமிழகத்தின் தனிப் பெரும் அடையாளமாக மாறி, பள்ளபட்டி நகருக்கு மங்காப் புகழை உருவாக்கியது.
இத்தனைக்கும் அடித்தளமிட்ட மேடத்தின் பெயரை , இந்த ஊர் மக்கள் *கமருன்னீஸா மேடம்* *கமருன்னீஸா மேடம்* எனச் சொல்லிச் சொல்லி பூரித்துப் போனார்கள்.
மேடத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் வாழ்த்தியபடியே தான் பேசுவார்கள்.
ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன்படும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்கும் போது அவள் குடும்பமே கல்வி கற்றுக் கொள்கிறது. இந்தக் கூற்றின் உண்மையை , கடந்த நாற்பது ஆண்டுகளாகவே இந்த ஊர் அனுபவித்து வருகிறது.
அதற்கு காரணம், எங்கள் *கமருன்னீஸா மேடம்* என்ற *முழு நிலா*- தான். இவர் தான் எங்கள் ஊரின் இருண்ட வானத்தை வெளிச்சமாக்கியவர்.
எங்கள் வானத்தை வெளிச்சமாக்கிய இந்த ஹாஜியா கமருன்னீஸா அவர்களின் மண்ணறையை, எல்லாம் வல்ல இறைவன்,
வெளிச்சம் நிறைந்த பூஞ்சோலையாக மாற்றடட்டும்.
ஆமீன்! ஆமீன் !!
யாரப்பில் ஆலமீன் !!!
Thanks
வண்ணப்பலகை
(20, நவம்பர், 2019)