முஹர்ரமையும், சதுர்த்தியையும் விட்டுக்கொடுத்த திருவல்லிக்கேணி மக்களின் மதநல்லிணக்கம்!
முஹர்ரம் பண்டிகை
Published : 21st Fri, Sep 2018
இதற்கு முன்னர், எப்பொழுதுமே முஹர்ரம் பண்டிகையும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே சமயத்தில் வந்ததே இல்லை. ஆனால், இந்த வருடம் வந்தது
முஹர்ரமையும், சதுர்த்தியையும் விட்டுக்கொடுத்த திருவல்லிக்கேணி மக்களின் மதநல்லிணக்கம்!
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன்பேட்டையில் பந்தல் போட்டு தங்கள் மதம் சார்ந்த சின்னங்களை வைத்து முஹர்ரம் சடங்குகளை நிறைவேற்றுவது வழக்கம் (புகைப்படம்). துக்க காலம் என அழைக்கப்படும் முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்களில், எண்ணற்ற இஸ்லாமியர்களும் சில இந்து மதத்தினரும் கூட இந்த இஸ்லாமிய மத சின்னங்களை வணங்கி ஆசி பெற்று செல்வர்.
இந்த 10 நாள் துக்க காலம் முடிந்த பின், விழா அமைப்பாளர்கள் அந்த புராதன மத பொருட்களையும் சின்னங்களையும் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வரை ஒரு சிறிய ஊர்வலம் சென்று, அங்குள்ள இந்து கோவில் குளத்தில் முக்கியெடுத்து மீண்டும் பாதுகாப்பாக எடுத்துச் செல்வர். இது பழைய சென்னையை சேர்ந்த சூஃபி இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழக்கம் ஆகும்.
1993ஆம் ஆண்டு முதல், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் பொழுது அதே இடத்தில் பந்தல் போட்டு விநாயகர் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தனர். பொதுவாக, மக்கள் வழிபட விநாயகர் சிலையை 10 நாட்கள் வைத்திருந்து, பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பது வழக்கம்.
இதற்கு முன்னர், எப்பொழுதுமே முஹர்ரம் பண்டிகையும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே சமயத்தில் வந்ததே இல்லை. ஆனால், இந்த வருடம் வந்தது.
இதனால் ஏற்படக்கூடிய சங்கடங்களை புரிந்துகொண்டு, திருவல்லிக்கேணியை சேர்ந்த இந்து மத விழா அமைப்பாளர்கள் தாமாகவே முன்வந்து பிள்ளையார் சிலையை வழிபாட்டுக்கு வைத்திருக்கும் நாட்களின் கால அளவை குறைத்துக்கொண்டனர். வெறும் 4 நாட்களிலேயே விநாயகரை கடலில் கரைக்க எடுத்து சென்று, இஸ்லாமிய சகோதரர்கள் அதே இடத்தில் தங்களது முஹர்ரம் சடங்குகளை மேற்கொள்ள வழி செய்தனர். இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகை சடங்குகளை, ஐந்தாவது நாளிலிருந்தே தொடங்கினர். இஸ்லாமியர்களும் தங்களது வழிபாட்டு நாட்களின் கால அளவை குறைத்துக்கொண்டு, 10 நாட்களுக்கு பதிலாக ஐந்து நாட்களிலேயே தங்கள் பிரார்த்தனைகளையும் தொழுகைகளையும் முடித்துக்கொண்டனர்.
இதைப் பற்றி, திருவல்லிக்கேணியை சேர்ந்த திரு.அத்தர் அஹமது அவர்கள் கூறுகையில், "விநாயகர் சிலையையும், இஸ்லாமிய மத சின்னங்களையும் ஒரே பந்தலில் வைத்தே, எந்தவித குழப்பங்களுக்கும் சங்கடங்களுக்கு இடம்கொடுக்காமல் இரண்டு பண்டிகைகளும் மிக அழகாக நடத்தி முடிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தேதியும், முஹர்ரம் பண்டிகை தேதியும் தான் ஒரே நாளில் மோதிக்கொண்டதே தவிர, மக்கள் ஒற்றுமையாகவே இருந்தனர். இதுதான் தமிழ்நாட்டில் இந்துக்களும், முஸ்லிம்களும் மற்ற மதத்தினரையும், அவர்களது நம்பிக்கையையும் மதிக்கும் முறை. இந்தியாவிலேயே இந்து-முஸ்லீம் சண்டையின்றி மத நல்லிணக்கத்தோடு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே" என சிலாகித்து கூறுகிறார்.
"அது மட்டுமல்ல, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ரம்ஜான் மாதத்தின் பொழுதும், இஸ்லாமியர்கள் நோன்பை முடிக்கும் வேளையில், இந்து நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் பழங்களும் தின்பண்டங்களும் வாங்கி வந்து அவர்களே பரிமாறுவது வழக்கம். இது ஒரு நீண்ட நெடிய பாரம்பரியமாக தொடர்கிறது. முஸ்லீம் நண்பர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து பரிமாறிய பின், ரம்ஜான் மாதம் முழுக்க அவர்களும் தினமும் 2 நிமிடம் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு செல்வார்கள்" என சொல்லி நம்மிடம் ஒரு வீடியோவை பகிர்கிறார்.
"இங்கே பிள்ளையார் வருகைக்காக, இஸ்லாமியர்கள் தங்கள் பண்டிகையை ஒத்திவைப்பார்கள். முஸ்லீம் நண்பர்கள் நோன்பு முடித்து பசியாற, இந்து மக்கள் உணவளித்து பரிமாறுவர். இது எங்கள் திருவல்லிக்கேணியின் பெருமைமிகு பாரம்பரியம்" என்றார் அத்தர் அஹமது.